வேலூர்: சத்துவாச்சாரியில் ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது. இங்கிருந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய ஆகிய மாவட்டங்களுக்குத் தினந்தோறும் சுமார் ஒரு லட்சம் லிட்டர் பால் வரை 600-க்கும் மேற்பட்ட முகவர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகப் பண்ணையிலிருந்து முகவர்களுக்குச் செல்லும் பால் சுமார் 3 - 4 மணி நேரம் தாமதமாகச் செல்வதாகவும் இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுவதோடு பாலுக்கு முன்கூட்டியே பணம் கட்டிய பால் முகவர்களும் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகக் கூறுகின்றனர்.
பால் விநியோகம் தாமதம் குறித்து விளக்கங்களை அதிகாரிகளிடம் கேட்டால் அதற்கான உரியப் பதில் அளிக்கவில்லை என்றும் முகவர்கள் கூறுகின்றனர். மேலும் சிலர் அதிகாரிகளிடம் சண்டை போட்டு தங்களது சொந்த வாகனத்தில் பாலை கொண்டு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், "சென்னைக்கு பால் அனுப்பப்படுவதாலும், முறையான ஆட்களை நியாமிக்காததாலும் தாமதம் ஏற்படுவதாக விநியோகஸ்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உள்ளூரை சேர்ந்த நாங்களே சொந்த வாகனம் மூலம் பாலை எடுத்து செல்லவும் அனுமதிக்க மறுக்கிறார்கள்" எனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பேசிய முகவர்கள் "திங்கட்கிழமை மாலையும் தாமதமாகவே பால் வந்தது. செவ்வாய்கிழமை காலை 4.00 மணிக்கு வர வேண்டிய பால் 7 மணியை கடந்தும் வரவில்லை. அதற்க்கு பிறகு வந்தால் நாங்கள் எப்படி விற்பனை செய்ய முடியும். இதே நிலை தான் கடந்த 6 நாட்களாக உள்ளது. ஆகவே அரசு ஆவினை காப்பாற்றவும், முகவர்களை காப்பாற்றவும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு இதற்க்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்" என கோரிக்கை வைக்கின்றனர்.
இது குறித்து வேலூர் ஆவின் பால் பண்ணை அதிகாரிகளிடம் கேட்ட போது, "கடந்த சில நாட்களாக சென்னைக்கு தினமும் 18 ஆயிரம் லிட்டர் பால் வேலூரிலிருந்தே செல்கிறது. அதன் காரணமாகவும், பால் பாக்கெட்டுகளை அடுக்கும் பணிக்கு ஆட்கள் குறைவாக வருவதாலும் இது போன்ற தாமதங்கள் ஏற்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாளை முதல் இப்பிரச்சனை இருக்காது" என உறுதியளித்துள்ளனர்.
இதையும் படிங்க: Today Gold Rate : தங்கம் விலை கிடுகிடு உயர்வு - இன்னைக்கு எவ்வளவு தெரியுமா?