வேலூர் மாவட்டம் தொரப்பாடி பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் காதர்பாஷா; கூலி தொழிலாளி. இவரது மகன் ஆதில்பாஷா(12). இவர் தொரப்பாடி பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக விடுமுறையில் இருந்த ஆதில்பாஷா வீட்டிலுள்ள ஆடுகளை மேய்த்து வந்தார்.
வழக்கம் போல் நேற்று (பிப்.10) ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற ஆதில்பாஷா, மாலை வரை வீடு திரும்பாததால் அவருடைய பெற்றோர் அவரைத் தேடிச் சென்றுள்ளனர். அப்போது தொரப்பாடி ஏரிக்கரை ஓரம் ஆடுகள் மேய்ந்த நிலையில், அருகே உள்ள கிணற்றில் ஆதில்பாஷா எடுத்து சென்ற 5 லிட்டர் கேன் மிதந்துள்ளது. சிறுவனின் உடைகள் கிணற்றின் கரை மீது இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து சிறுவன் கிணற்றில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகித்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்களால் சிறுவனின் உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், இரவாகி விட்டதாலும், கிணற்றில் தண்ணீர்அதிகம் இருப்பதாலும் சிறுவனைத் தேடும் பணியை தேசிய பேரிடர் மீட்பு படையின் உதவியேடு நாளை தொடங்கலாம் எனக் கூறியுள்ளனர்.
இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், இரவு முழுவதும் மோட்டர் மூலம் கிணற்றின் தண்ணீரை வெளியேற்றி இன்று (பிப்.11) அதிகாலை 4 மணிக்கு சிறுவனை சடலமாக மீட்டனர்
இதுகுறித்து பாகாயம் காவல் துறை நடத்திய விசாரணையில், சிறுவன் ஆதில்பாஷா, ஓரளவிற்கு நீச்சல் தெரிந்ததால் தனியாக தனது இடுப்பில் 5 லிட்டர் கேனை கட்டிகொண்டு கிணற்றில் குதித்து நீச்சல் பழகி இருக்கலாம் என்றும், இதனால் நீரில் முழுகி உயிரிழந்து இருக்கக்கூடும் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தனர்.