வேலூர், ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே பாணாவரம் காப்புக் காட்டில் ஆள் நடமாட்டம் இருப்பதாக, ஆற்காடு சரக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, வேலூர் மண்டல உதவி வனப்பாதுகாவலர் முரளிதரன் தலைமையில், 30 பேர் கொண்ட குழுவினர், மூன்று தனிப்படைகளாகப் பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு பாணாவரம் காப்புக்காடு வெட்டுபாறை அருகே ரோந்து பணியில் வனக்காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களைக் கண்டு மர்ம நபர்கள் சிலர் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை மடக்கிப் பிடித்த வனக்காவலர்கள், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், வேடந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (27), மாகானிப்பட்டு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, பாணாவரம் மகேண்டிரவாடி இடையே ரயில் பாதை ஒன்று உள்ளது. ரயில் வரும் சத்தத்தைப் பயன்படுத்தி செம்மரங்களை வெட்டி வந்துள்ளனர். அதேபோல், அன்று பாணாவரம் காப்புக் காட்டின் வெட்டுப் பாறை அருகே இரண்டு செம்மரங்களை துண்டு துண்டாக வெட்டி கடத்தலுக்கு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, இரண்டு டன் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், பிடிபட்ட மணிகண்டன் மற்றும் விஜயகுமார் அளித்த தகவலின்பேரில், வேடந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மற்றொரு மணிகண்டன் (20) மற்றும் திருப்பாற்கடலில் அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் (28) என்பவரையும் கைது செய்தனர்.
விசாரணையில் பாணாவரம் காப்புக் காட்டில் இருந்து செம்மரங்களை வெட்டி, சென்னை அருகே உள்ள குடோனில் பதுக்கி வைத்துள்ளனர் என்பதும் அவர்களுக்கு தகவல் வரும்போது, பதுக்கிவைத்திருந்த செம்மரக்கட்டைகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையும் படிங்க: புதுச்சேரி அமைச்சரின் செல்போனை பறித்துச் சென்ற நபர் கைது!