திருச்சி: திருச்சி மாவட்டம் இருங்களூர் ஊராட்சியில் உள்ள தனியார் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சி நேற்று (மார்ச் 12) நடைபெற்றது. 'அக்னிச் சிறகே' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை ரோகிணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மகளிர் தின விழாவையொட்டி கல்லூரி மாணவிகளுக்கு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை ரோகிணி பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோகிணி, "சமூகத்தில் பெண்கள் மீதான தவறான பார்வையின் நீட்சிதான் பாலியல் வன்கொடுமை போன்ற செயல்களுக்கு காரணமாக அமைகிறது. அடுத்த தலைமுறையினர் பெண் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் அனைத்தையும் ஆண் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்தால் பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும்.
குடும்பங்கள் தனித்தனியாக இருப்பதாலும், குழந்தைகளை பெற்றோர்கள் சிறுவயதில் எப்படி வளர்த்தார்களோ அதேபோல் முதுமையிலும் நாம் பெற்றோரைப் பார்த்துக்கொண்டால் முதியோர் இல்லங்கள் வருவதற்கு வாய்ப்பில்லை. சாதிப் பாகுபாடு காரணமாகத்தான் வன்கொடுமை அதிகரிக்கிறது. இந்த நிலை மாற வேண்டுமென்றால் ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய புரிதல் வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: பேருந்துக்குள் தாக்குதல் நடத்திய மாணவர்கள் - வைரலாகும் வீடியோ