மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியிலிருந்து கள்ளக்குறிச்சி சென்ற பாஜக விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே. நாகராஜூக்கு மணப்பாறையில் அக்கட்சியினர் வரவேற்பு அளித்தனர். இதில் திருச்சி மாவட்ட விவசாய அணி தலைவர் சுப்பிரமணி தலைமையிலான சுமார் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜி.கே. நாகராஜூக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே நாகராஜ், "மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்காக வரலாற்றிலேயே முதல் முறையாக ஐந்து லட்சம் கோடி மதிப்பிலான விவசாயத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. கிசான் அட்டை, கூட்டு பண்ணை, இயற்கை விவசாயம் உள்ளிட்ட 32 திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக மதுரை புறநகர் பகுதியில் உழவர் சேவை மையம் பாஜக விவசாய அணியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வாரம் ஒரு முறை அரசு அலுவலர்களை அழைத்து விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசுகள் தங்களுடைய திட்டம் போலவே தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறது.
வருகின்ற தேர்தலில் பாஜக எந்தக் கட்சியை பார்த்து கை நீட்டுகிறதோ அவர்கள்தான் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க முடியும். வருகின்ற தேர்தலில் பாஜக கிங் மேக்கராகவும், அடுத்த தேர்தலில் கிங்காகவும் இருக்கும். திராவிட கட்சிகளை களையெடுக்கும் முக்கியப் பணியை பாஜக விவசாய அணி சிறப்பாக செய்யும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இயற்கை விவசாயம்: கம்பு சாகுபடியில் அசத்தும் பெரம்பலூர் இளைஞர்