திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ளது ஆனாம்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் கடந்த ஒரு வருடமாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
ஆனால் மக்கள் சிரமம் அடையும்போது மட்டும் லாரிகள் மூலம் பற்றாக்குறையாக தண்ணீர் வழங்கப்பட்டுவந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அன்றாட தேவையான தண்ணீர் பிரச்சனையை தங்களது சொந்த செலவில் நிவர்த்தி செய்துகொண்டு-வந்தனர்.
இந்நிலையில், ஊராட்சி ஒன்றியம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இன்று அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மணப்பாறை - கோவில்பட்டி சாலையில் உசிலை ஊரணி என்ற இடத்தில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் சமரச பேச்சுவார்த்தையை பொதுமக்கள் ஏற்க மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் முறையான குடிநீர் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர்.