திருச்சி: மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் ஊராட்சிக்குட்பட்டது, கம்புளியம்பட்டி, பூனைக்கல்பட்டி. இந்த பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகள் உள்ளனர். ஒன்றாவது வார்டு பகுதியைச் சேர்ந்த இவர்களுக்கு, அந்த வார்டு பகுதிக்குள்ளேயே 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் வேலை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரத்திற்கு முன் ஒன்றாவது வார்டு பகுதியைச் சேர்ந்த இவர்கள், எட்டாவது வார்டு பகுதிக்கு வேலைக்குச்செல்ல வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை ஏற்க மறுத்த 100 நாள் வேலைத்திட்டப் பயனாளிகள், சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவு கொண்ட எட்டாவது வார்டு பகுதிக்கு, தங்களால் வேலைக்குச் செல்ல இயலாது என்றும்; தங்கள் பகுதியிலேயே வேலை வழங்க வேண்டும் எனக் கூறி 100 நாள் வேலைத் திட்டப்பணியை கடந்த இரண்டு வாரமாக புறக்கணித்து, விவசாய வேலைகளுக்குச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து நமது ஈடிவி பாரத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த 100 நாள் வேட்டை திட்ட பணியாளர்கள் அளித்த பிரத்யேக பேட்டியில்,
''நாங்கள் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆறு பகுதியைச் சேர்ந்த, ஆறு கிராமங்களுடன் சேர்ந்து வேலை பார்த்து வருகிறோம். இந்நிலையில் ஒன்றாவது வார்டு பகுதிக்கு உட்பட்ட இரண்டு ஊர்ப்பகுதி மக்களை மட்டும் தனியாகப் பிரித்து, அவர்களை மட்டும் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புத்தாநத்தம் பகுதியில் வேலைக்கு அனுப்ப முயற்சிக்கின்றனர்.
ஊராட்சி மன்றத்தின் செயல் பழிவாங்கும் நோக்கத்தில் இருக்கிறது. மூன்று கிலோ மீட்டர் தொலைவு கொண்ட அப்பகுதிக்கு, ஒரு நாளைக்கு மூன்றுமுறை சென்று வர வேண்டி உள்ளதால், ஒரு நாளைக்கு சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், பள்ளி நாட்களில் தங்களது குழந்தைகளுக்கு சரிவர உணவு கூட சமைத்துக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதில், இருசக்கர வாகனத்தில் வேலைக்குச்செல்லும் முதியவர்கள் அவர்களது சம்பளத்திலிருந்து தினசரி 100 ரூபாயை பெட்ரோலுக்கு என ஒதுக்க வேண்டிய நிலை இருக்கிறது. பணிக்காக ஆற்றுவாரி, வயல்வெளி பகுதிகளின் வரப்பு பகுதிகளை உயிருக்கு ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது'' எனத் தெரிவித்தனர்.
மேலும், இதேபோல் தங்கள் ஊர் பகுதிக்கு குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளையும் ஊராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. இது குறித்து பலமுறை ஊராட்சி மன்றத் தலைவர் வார்டு உறுப்பினரிடம் எடுத்துக் கூறியும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல், 'உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்' என ஊராட்சி நிர்வாகம் தெரிவிப்பதாகவும் கூறினர்.
இந்நிலையில், இது குறித்து உயர்மட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த நிலையில், ஓரிரு நாட்களில் 100 நாள் வேலையை தங்கள் பகுதியிலேயே வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: தேசிய திருநர் தினம்: 1 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும்.. காவலராக போராடி வரும் தஞ்சை யாழினி!