திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரின் மையப்பகுதியில் சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேப்பிலை மாரியம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று மாலை பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.
இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் 'பூ' தட்டுகளை ஏந்தியபடி ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்து, பூக்களை அம்மனுக்கு காணிக்கையாகச் செலுத்தினர்.
இதனையடுத்து, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 15-க்கும் மேற்பட்ட ரதங்கள் காந்தி நகர், அண்ணாவி நகர், மதுரை ரோடு, திருச்சி ரோடு, காளியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ராஜ வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக மாரியம்மன் கோயிலை வந்தடைந்தன.
இந்த விழாவில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனின் அருள்பெற்றுச் சென்றனர்.
விடிய விடிய நடைபெற்ற இந்த ரத ஊர்வலத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.