வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பாக நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன் தொடர்ச்சியாக மக்கள் அதிகாரம், சிஐடியு, ஏ.ஐ.எஸ்.எஃப். உள்பட அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் இன்று (நவ. 26) நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள், புதிய தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும், புதிய வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்தால் கார்ப்பரேட் முதலாளிகள் செய்யும் விவசாயத்தால் விவசாயிகளின் நிலங்கள் பறிபோகும், குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது, அரசு கொள்முதல் நிறுத்தப்பட்டு நியாயவிலைக் கடைகள் மூடப்படும், உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு விலை உயரும், விவசாய முழுவதும் கார்ப்பரேட் கையில் போகும், விவசாயிகள் நிலங்களை இழப்பதுடன் வேலை இழப்புகள் அதிகரிக்கும், நமது சுற்றுச்சூழல் நாசமாகும், நாட்டு மக்களின் உணவு சுயசார்பு கேள்விக்குறியாகும்.
ஆகையால் இந்தச் சட்டங்களை எதிர்த்து பல மாதங்களாக விவசாயிகள் கடுமையாகப் போராடிவருகிறார்கள். பாஜக கொண்டுவந்த இந்த வேளாண் சட்டங்களைத் தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது.
புதிய கல்விக் கொள்கை, புதிய மின்சாரச் சட்டம், புதிய குற்றவியல் சட்டங்கள் என அனைத்தையும் பாஜக அரசு நிறைவேற்றிவருவது கண்டிக்கத்தக்கது. உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.