விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக இருப்பவர் ராஜா. ஊடகப்பிரிவு மாநில துணைச் செயலாளராக இருப்பவர் ரமேஷ். இவர்கள் இருவரும் இணைந்து திருச்சி மன்னார்புரத்தில் எல்பின் என்ற பெயரில் பன்னாட்டு முறையில் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தின் மூலம் மளிகை பொருட்கள், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட குழுக்கள் அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் நாள்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்த நிறுவனத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொது மக்களிடம் வசூல் செய்த ஐந்து கோடி ரூபாயை மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ராஜா, ரமேஷ், பாதுஷா, சாகுல்அமீது, பஷீர் ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஐந்து பேரையும் போலீசார் தேடி வந்தனர்.
இதையடுத்து அவர்கள் ஐந்து பேரும் ரூ.1.40 கோடி செலுத்தி ஜாமீன் பெற்றனர். மேலும் தினமும் பொருளாதார குற்றப்பிரிவில் ஆஜராகி கையெழுத்திட்டும் வருகின்றனர். இந்நிலையில் இந்த நிறுவனத்தினருடைய காரிலிருந்து ரூ. 2.5 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காரில் பயணம் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் தங்கதுரை, குமுளூர் பிரபாகரன், சென்னை மார்க்ஸ் டிரைவர் தங்கம் ஆகியோரிடம் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மன்னார்புத்தில் உள்ள எல்பின் நிறுவனத்தில் மேலும் பணம் பதுக்கி இருக்கலாம் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.