ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று (டிச. 25) அதிகாலை நடைபெற்றது. பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என பக்தி பரவசத்துடன் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
வைகுண்ட ஏகாதசி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. கடந்த 10 நாள்களாக பகல்பத்து வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் உற்சவர் நம்பெருமாள் தினமும் ஒரு அலங்காரத்தில் எழுந்தருளினார். அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல்பத்து வைபவத்தின் நிறைவு நாளான நேற்று (டிச. 24) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இதைத்தொடர்ந்து வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது.
பகல்பத்து, ராப்பத்து
மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாக பத்து நாள்களும், பிறகு பத்து நாள்களும் என பகல்பத்து, ராப்பத்து வைபவம் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பாக நடைபெறும்.
இன்றைய சிறப்பு அலங்காரம்
அதற்கு முன்னதாக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து அதிகாலை 3.25 மணிக்கு ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு திரு ஆபரணங்கள் அணிந்து புறப்பட்டுத் திருச்சுற்றில் உள்ள தங்க மரத்தைச் சுற்றிவந்து செர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் சென்றடைந்தார்.
சொர்க்கவாசல் திறப்பு
அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்ட உடன் அங்கு கூடி இருந்தவர்கள் கோவிந்தா கோவிந்தா என்று பக்திப் பரவசத்தில் முழக்கமிட்டனர். பின் பரமபத வாசலைக் கடந்த நம்பெருமாள் அங்கிருந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நம்பெருமாளைப் பக்தர்கள் தரிசித்துவருகின்றனர்.
ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் பெரிய விழாவான பரமபத வாசல் திறப்பில் தமிழ்நாடு முழுவதுமிருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் குறிப்பிட்ட சிலர் மட்டுமே சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதன் காரணமாக சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஒரு சில மணித்துளிகளில் சொர்க்கவாசல் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த விழாவிற்காக திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் தலைமையில் துணை ஆணையர்கள் பவன் குமார் ரெட்டி, தேவரத்தினம் மற்றும் கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள், திருச்சி மாநகர உதவி ஆணையர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்பட ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பக்தர்கள் அனுமதி
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் சொர்க்கவாசல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
சொர்க்க வாசல் இன்று திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ராப்பத்து வைபவம் 10 நாள்கள் நடைபெறும். இதில் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தினமும் ஒரு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பகல்பத்து 10ஆம் நாள்: மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்