திருச்சி: பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்புவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். டிசம்பர் 22ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி பகல்பத்து, ராப்பத்து என்று 21 நாட்கள் விழா நடைபெறும்.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல்பத்து உற்சவத்தின் 3ஆம் திருநாளான இன்று (டிசம்பர் 25) சுக்கிரனுக்கு அதிபதியான நம்பெருமாள்(உற்சவர்) மூலஸ்தானத்திலிருந்து "சென்னியோங்கு" 7ஆம் பாசுரம், "மார்கழி திங்கள்" பாசுரத்திற்கேற்ப நம்பெருமாள் சாய்வு சவுரி கொண்டை அணிந்து, ரத்தின அபயஹஸ்தம், ரத்தினகிளி, பவள மாலை, முத்துச்சரம் மற்றும் பஞ்சாயுத மாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடியபடி மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளினார்.
பின்னர் ராமானுஜர், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் தொடர்ந்துவர வழியெங்கும் அரையர்கள் சேவையின்போது திருமொழி பாசுரங்களை கேட்டருளி, பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். அர்ச்சன மண்டபத்தில் பெருந்திரளான பக்தர்கள் வரிசையில் நின்று பூலோகவைகுண்ட பெருமாளை ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு வணங்கிச்சென்றனர்.
இதையும் படிங்க: சேது சமுத்திர திட்டத்திற்காக கிளர்ச்சி - கி.வீரமணி அழைப்பு