திருச்சி: தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்குகளை பதிவுச்செய்ய சிறப்பு வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் மாயவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "கடந்த மக்களவைத் தேர்தலின்போது, 4.36 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில், 38 ஆயிரம் பேருக்கு தபால் வாக்கு அளிக்க வாக்குச்சீட்டு உரிய நேரத்தில் தரப்படவில்லை. தாமதமாக வாக்குச்சீட்டு வழங்கப்பட்டதால் அவற்றை அனுப்ப முடியாமல் போய்விட்டது.
மேலும், கெசட் அலுவலரின் கையொப்பம் இல்லை எனக்கூறி 25 முதல் 26ஆயிரம் தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இந்த வகையில், ஆசிரியர்கள் உள்பட 63 ஆயிரம் பேரின் வாக்கு உரிமை பறிக்கப்பட்டது. காவல்துறை சார்பில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு முன்கூட்டியே வாக்குகளைப் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்துதரப்படுகிறது.
தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தலுக்குப் பின்போ சிறப்பு வாக்குச்சாவடி அமைத்து அதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதவிர மாற்று ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்ய முன்வந்தால் அதை வரவேற்போம். இதுதொடர்பான கோரிக்கை மனு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.
மாயவன் செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசுகையில், அவ்வமைப்பின் மாநிலத் தலைவர் பக்தவச்சலம், மாநில பொதுச்ச யெலாளர் சேது செல்வம், பொருளாளர் ஜெயக்குமார், நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ஊழியர் உரிமைகளைப் பறிப்பதே அரசுகளின் குறியாக இருக்கிறது - ஆசிரியர்கள் சங்கம் குற்றச்சாட்டு