திருச்சி: அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திபெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில். இக்கோயிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருகை தந்து அம்மனை தரிசனம் செய்ய வருகின்றனர். அப்படி வரும் பக்தர்கள் கோயிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவர். அவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை, 15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.
மேலும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை கோயில் மண்டபத்தில், கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுவர். அதற்காக திருச்சி, வயலூர் சாலையில் உள்ள ஆத்மசங்கம் நற்பணி தொண்டு நிறுவனம் சார்பில், 216 பேர் உள்பட, 600 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த 21 வயதான அஜய், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஜெயக்குமார் ஆகிய இருவரும் யாரும் பார்க்காத நேரத்தில் சுமார் 6 பவுன் நகைகளை எடுத்து தனது கால்சட்டை பையில் வைத்துள்ளனர்.
அதன் பின்னர் அவர்கள் நகைகளைத் திருடும் சம்பவம் சிசிடிவி காட்சியில் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக இந்தச் சம்பவம் குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளித்துள்ளனர். மேலும் அந்தப் புகாரின் பேரில் வந்த சமயபுரம் போலீசார், இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.