உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 1,520 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை தெரிவித்திருந்தது.
தொற்றுநோய் பரவலில் இரண்டாம் கட்ட ஆபத்து நிலையை அடைந்திருக்கும் தமிழ்நாட்டில் 22 மண்டலங்கள், கோவிட்-19 பெருந்தொற்றின் சிவப்பு குறியீட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தீவிரக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்க முழுமையான 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு வேகமாக முன்னெடுத்துவருகிறது.
இருப்பினும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இதன் பரவலால் தமிழ்நாட்டில் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
குறிப்பாக, சிவப்பு குறியீடு மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள திருச்சி மாவட்டத்தில் இதுவரை 50 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 21 பேர் திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தீவிரக் கண்காணிப்பிற்குள் வைக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அங்கு சிகிச்சைப் பெற்று வந்த திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நேற்று (ஏப்ரல் 20) இரவு திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், அந்த இளம்பெண் ஏற்கனவே நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவரது சளி மாதிரி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : இதுதான் நீங்கள் மருத்துவருக்கு செய்யும் மரியாதையா? மகப்பேறு மருத்துவர் வருத்தம்