திருச்சி: இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்திய அரசு சார்பில் ஆபரேஷன் அஜய் திட்டம் என்ற திட்டம் ஏற்பாடு செய்து, அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் திருச்சி கருமண்டபம் திருநகரைச் சேர்ந்த பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயிலும் பழனியப்பன் (24) என்ற முதுநிலை பட்டப்படிப்பு மாணவர், உறையூரைச் சேர்ந்த குருச்சரண் (29) என்ற ஆராய்ச்சி படிப்பு மாணவர் ஆகியோர் இஸ்ரேலில் இருந்து சொந்த ஊரான திருச்சிக்கு பத்திரமாக திரும்பியுள்ளனர். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் வந்த அவர்களை, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆரத்தழுவி வரவேற்றனர்.
இது குறித்து ஆராய்ச்சி படிப்பு மாணவர் பழனியப்பன் ரமேஷ் கூறுகையில், “திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பு முடித்தேன். நான் படித்த கல்லூரியில் பாடத்திட்டம் என்னவென்றால், படித்து முடித்த பிறகு ஆராய்ச்சி குறித்த திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும். அதற்காக நான் இஸ்ரேல் நாட்டைத் தேர்வு செய்தேன். கடந்த ஒரு வருடமாக இஸ்ரேலில் ஆராய்ச்சி குறித்த படிப்பை மேற்கொண்டு வருகிறோன்.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடைபெற்று வரும் போர் தாக்குதல், அச்சுறுத்தல் போன்றவைகளை ஊடகங்கள் மூலமாகவே கண்டுள்ளோம். முதல் முறையாக போர் தாக்குதலை நேரடியாக பார்க்கும்போது மிகவும் அச்சமாக இருந்தது. எங்கள் பல்கலைக்கழகத்தின் மூத்த மாணவர்கள் பிஹெச்டி போன்ற ஆராய்ச்சி படிப்புகளை 5 மற்றும் 6 வருடமாக இஸ்ரேலில் பயின்று வருகின்றனர். இஸ்ரேலில் சிக்கி இருந்த எங்களை மீட்பதற்கு மாநில அரசு மற்றும் மத்திய அரசு மிகவும் உதவி செய்தது.
தினமும் எங்களை தொடர்பு கொண்டு, எங்களது விபரங்களை சேகரித்தனர். நாங்கள் இருக்கும் இடத்தை உறுதி செய்தார்கள். அதன் பிறகு ஆபரேஷன் அஜய் திட்டம் மூலம், முதற்கட்டமாக நாங்கள் புறப்பட்டு டெல்லி வந்தோம். தலைநகர் டெல்லி வந்த பிறகு தமிழகத்தைச் சேர்ந்தவர்களை தமிழக அரசு கவனித்துக் கொண்டது. எங்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியத் தேவைகளை தமிழக அரசு மேற்கொண்டது.
அபாயகரமான சூழலில் இருந்து மீண்டு வந்து குடும்பத்தைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இஸ்ரேலில் போர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஆபத்தான நிலையில் இருந்த நாங்கள் மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் இந்தியா திரும்பி உள்ளோம். போர் முடிந்தவுடன் படிப்பிற்காக மீண்டும் இஸ்ரேல் செல்வோம்” என கூறினர்.
இதையும் படிங்க: "சாராயம் குடித்து செத்தா ரூ.10 லட்சம் மாணவன் மரணத்திற்கு ரூ.2 லட்சம் தானா?" - கடலூர் அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்!