தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு திருச்சியில் நேற்று (ஆகஸ்ட் 18) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த இரு தினங்களாக மதுரையைச் சேர்ந்த அமைச்சர்கள் இரண்டு பேர், மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இது மறைந்த தலைவர் எம்.ஜி.ஆருக்கும் செய்யும் துரோகம் மட்டுமின்றி, மறைந்த தலைவர்களின் கொள்கைகளுக்கும் எதிரானது.
தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியை சுற்றி டெல்டா மாவட்டங்கள் உள்ளன. புகழ்பெற்ற கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகள், சர்வதேச விமான நிலையம், பொன்மலை ரயில்வே பணிமனை, துப்பாக்கி தொழிற்சாலை உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் திருச்சியில் உள்ளது. திருச்சிக்கு வந்த சாபக்கேடு போல் ஏற்கனவே உயர் நீதிமன்ற கிளை, மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. எய்ம்ஸ் மையம், மருத்துவமனை ஆகியவையும் சேலம், மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது.
அதேபோல் திருச்சியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில், மாயவரம் வரை நீட்டிக்கப்பட்டது. கடுமையான போராட்டத்திற்குப் பின்னரே தற்போது மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் திருச்சியிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் தான் சாதி, மத கலவரங்கள் ஏதுமில்லாத அமைதியான மாவட்டமாகும்.
எம்.ஜி.ஆர் நல்ல உடல் நிலையுடன் இருந்திருந்தால் இந்நேரம் திருச்சி இரண்டாவது தலைநகரமாக உருவாகியிருக்கும். கரோனா பாதித்துள்ள தற்போதைய நிலையில், மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என கூறுவதற்கான காரணம் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இந்த பிரச்னைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்து, திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும்.
இதற்காக திருச்சியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகள், மத தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சாதி சங்கங்கள், ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து போராட்ட குழு அமைக்கப்படும். தேர்தல் அறிக்கையில் திருச்சியை இரண்டாவது தலைநகராக்குவோம் என்று அறிவிக்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'பருவக் கட்டணம் செலுத்தாவிடில் நிரந்தரப் பெயர் நீக்கம்’ - அண்ணா பல்கலை. அதிரடி!