திருச்சி மத்திய சிறை அருகே தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் இன்று நடைபெற்றது. தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எதிராக தமிழ்நாடு சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 1000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் என்ற வாசகம் எழுதிய கறுப்பு பலூன்கள் பறக்கவிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் அப்துல் கரீம், “மத்திய அரசு என்பிஆர் மூலமாக அனைவரிடமும் பிறப்புச் சான்றிதழ் வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை. கேரளா, பிகார், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவையில் என்பிஆருக்கு எதிராகத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதேபோல் தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் தீர்மானம் கொண்டுவர வேண்டும். இது மத்திய அரசின் திட்டம் என்பதால் முதலமைச்சர் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர முகாந்திரம் இல்லை என அலட்சியமாகப் பேசியுள்ளார்.
சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்த பின்பே இதர மாநிலங்களில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பார்கள். அதனால் தமிழ்நாடு முதலமைச்சர் கூறுவது முற்றிலும் மாறாக உள்ளது. எனவே அரசு இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: சேலத்தில் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டம்!