திருச்சி: நெருங்கி வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதிமுக எம்எல்ஏ காரில் ஒரு கோடி ரூபாய்
இந்நிலையில் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே முசிறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜூக்கு சொந்தமான காரிலிருந்து ஒரு கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு விசாரணை மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய சிவராசு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
காவலர்களுக்கு 34 கவர்களில் தலா 2,000 ரூபாய்
இதையடுத்து திருச்சி மேற்கு பகுதிக்கு உட்பட்ட தில்லைநகர், அரசு மருத்துவமனை காவல் நிலையங்களில் காவலர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. திருச்சி மேற்கு திமுக வேட்பாளர் கே.என்.நேரு தபால் வாக்கில் தனக்கு வாக்களிப்பதற்காக 34 கவர்களில் தலா 2,000 ரூபாய் பணத்தை காவலர்களுக்கு விநியோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை கே.என்.நேரு மறுத்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
சிபிசிஐடி தீவிர விசாரணை
இது தொடர்பாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் மேற்கொண்ட விசாரணையில் திமுக வழக்கறிஞர் பாரதி மணிவண்ணன் கைது செய்யப்பட்டார். மேலும் காவல் ஆய்வாளர் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
காவல் ஆணையர் டிரான்ஸ்பர்: உதவி ஆணையர் சஸ்பெண்ட்
சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் இந்தச் சூழலில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தேர்தல் தொடர்பில்லாத பணிக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் திருச்சி மாநகர காவல் சரக உதவி ஆணையர் தமிழ்மாறன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான காரணம் தெரியவில்லை.