திருச்சியில் அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, மண்ணச்சநல்லூர், புள்ளம்பாடி, முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூர், உப்பிலியாபுரம் ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் ஆறு ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாக 27ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 30ஆம் தேதியும் எட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
மொத்தம் 4,077 பதவிகளுக்கு இத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் செய்ய அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகள், அமமுக, நாம் தமிழர் கட்சி, சுயேச்சைகள் என பல கட்சியினர் குவிந்தனர்.
இதைத்தொடர்ந்து 24 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 149 பேரும், 241 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலருக்கு 1,443 பேரும், 404 கிராம ஊராட்சித் தலைவருக்கு 2,067 பேரும்; 3,408 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 ஆயிரத்து 582 பேரும் என மொத்தம் 4 ஆயிரத்து 77 பதவிகளுக்கு 13 ஆயிரத்து 241 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இவற்றை மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பரிசீலனையின்போது மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்குத் தாக்கல் செய்யப்பட்டதில் ஒரு மனு, ஊராட்சி ஒன்றியப் பதவிக்கு தாக்கல் செய்யப்பட்டதில் 15 மனுக்கள், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு தாக்கல் செய்யப்பட்டதில் 18 மனுக்கள், கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு தாக்கல் செய்யப்பட்டதில் 49 மனுக்கள் என மொத்தம் 83 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதையும் படிங்க:நிர்பயா வழக்கு: தலைமை நீதிபதி பாப்டே விலகல்!