திருச்சி: திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு மத்திய மண்டல காவல்துறை தலைவர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மத்திய மண்டல காவல் துறைத் தலைவராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றது முதல், மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக கரூர் மாயனூர் காவல் நிலையம் எல்லைக்குள்பட்ட மணவாசி பகுதியில் வேலைவாய்ப்பு குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு போதை விழிப்புணர்வு, போக்சோ, சைபர் கிரைம் விழிப்புணர்வு, குழந்தை திருமண சட்டம் உள்ளிட்டவைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
போலீஸ் சைபர் லேப் அமைப்பு
பின்னர் கரூர் மாவட்டத்தில் பள்ளியில் படிக்கும் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் இணைய வழி குற்றச்செயல்களில் பாதிக்கப்படும்போது குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டும், ஒவ்வொரு பள்ளி கல்லூரிகளிலும் போலீஸ் சைபர் லேப் அமைப்பு தொடக்க விழா நேற்று (ஜூலை 23) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கரூர் வெள்ளியனை அமராவதி கலை அறிவியல் கல்லூரியில் செயல்பட்டுவரும், காலேஜ் லெவல் போலீஸ் சைபர் கிளப் அமைப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய மண்டல காவல்துறை தலைவர் (IG) பாலகிருஷ்ணன், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சுந்தரவடிவேல் மாணவர்கள் இடையே கலந்துரையாடல் மேற்கொண்டனர்.
சட்டரீதியான நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், “குட்கா, போதைப் பொருள் விற்பனையை தடை செய்ய நேரடியாக வணிகர்கள் சங்கங்கள் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்கள் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சீல் வைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
மத்திய மண்டலத்தில் இதுவரை அதிகபட்சமாக விற்பனை செய்யப்பட்டு வந்த குட்கா பொருள்கள், பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்படுவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட முகவர்கள் மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சட்டவிரோதமான குட்கா விற்பனை தடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியா திரும்ப பணம் இல்லை- கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் கைது