திருச்சி, கோட்டை ஸ்டேஷன் ரோடில் ஏராளமான மின் சாதன விற்பனைக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த சாலையில் உள்ள வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் என்ற கடையில் இன்று (செப்.4) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பூட்டியிருந்த கடைக்குள் இருந்து முதலில் புகை வெளியே வந்த நிலையில், இதை கண்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தத் தீ விபத்தில் கடையில் இருந்த மின்சாதனப் பொருள்கள் ஏராளமானவை சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக கோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.