உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் இதற்கென தடுப்பு நடவடிக்கைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், திமுக சார்பில் மக்களுக்கு கரோனா தடுப்பு பொருட்களான முகக் கவசம், சானிடரி, கை கழுவும் சோப்பு ஆகியவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு திருச்சி தில்லைநகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் இந்த பொருட்களை திமுக பகுதி செயலாளர்களிடம் ஒப்படைத்தார்.
பகுதி செயலாளர்கள் மூலம் மக்களிடம் வீடுவீடாக கொண்டுச்சென்று இந்த பொருட்களை வழங்கி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு பேசுகையில், ”நாங்கள் ஏற்கனவே கரோனா அபாயம் குறித்து சட்டப்பேரவையில் எச்சரித்தோம், ஆனால் ஆளுங்கட்சியினர் அதை கண்டுகொள்ளவில்லை.
தற்போது இதன் விபரீதம் புரிந்து செயல்படத் தொடங்கியுள்ளனர். தற்போது குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இது போதுமானதாக இல்லை, இதை எப்படி கொண்டு போய் வழங்குவார்கள் என்பது குறித்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் அன்பழகன் மற்றும் பகுதி செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அரசின் அனுமதி கிடைத்தால் அதை செய்ய தயாராக இருக்கிறேன் - கமல் ட்வீட்