திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா, திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், திருச்சி மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலின்றியும், முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டும், சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
அதன்படி கடந்த மே 29 அன்று அரிஸ்டோ உயர்மட்ட மேம்பாலம் போக்குவரத்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டு, மன்னார்புரம் மற்றும் எடமலைப்பட்டி புதூரிலிருந்து வரும் வாகனங்கள் மட்டும் பாலத்தின் மேலே செல்லவும், திண்டுக்கல் சாலை, மத்திய பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே சந்திப்பு ஆகிய பகுதிகளுக்கு பாலத்தின் கீழே செல்லவும் ஒருவழிப்பாதையாக அனுமதிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அரிஸ்டோ உயர்மட்ட மேம்பாலத்தை இரு வழிப்பாதையாக மாற்றும் பொருட்டு பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலின்றி எளிதாக பயணிக்க வேண்டி, திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர். இந்த நிலையில், அரிஸ்டோ மேம்பாலத்தில் இருவழிப்பாதையாக பயணம் செய்வதற்கு, இன்று (ஜூலை 5) முதல் பொதுமக்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரிஸ்டோ மேம்பாலத்தில் மாற்றப்பட்டுள்ள புதிய போக்குவரத்து முறை: மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கீழே இறங்கவும், மேலே செல்லவும் என இருபுறமும் செல்லலாம். ரயில்வே சந்திப்பை நோக்கிச் செல்லும் வாகனங்கள் கிழே இறங்க மட்டும் அனுமதி. மன்னார்புரத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் மேலே, கீழே என இருபுறமும் செல்லலாம். எடமலைபட்டிபுதூரில் (மதுரை ரோடு) இருந்து செல்லும் வாகனங்கள் மேலே செல்ல மட்டும் அனுமதி. திண்டுக்கல் ரோடு செல்லும் வாகனங்கள் மேலே - கீழே என இருபுறமும் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, திண்டுக்கல் சாலை மார்க்கத்திலிருந்தும், மத்திய பேருந்து நிலையம் மார்க்கத்திலிருந்தும், எடமலைபட்டிபுதூர் செல்லும் வாகன ஒட்டிகள் பாலத்தின் மேல் ஏறி செல்ல அனுமதியில்லை. மேலும், இரு சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் (இலகுரக வாகனம் மட்டும்) மற்றும் பயணிகள் பேருந்துகள் ஆகிய வாகனங்கள் மட்டுமே பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் பாலத்தில் செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, இருவழிப்பாதையாக பயன்பாட்டில் உள்ள மேம்பால சாலையின் நடுவில் தொடக்கத்தில் இரும்பு பேரிகாட்ஸ் (Barricades) அமைத்தும், அதன் பின்னர் பிளாஸ்டிக்கால் ஆன Pollard அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தில் திசை காட்டும் சைகை பலகை (Sign Board) மற்றும் மிளிரும் LED லைட்டுகள் (LED Blinkers), விழிப்புணர்வு ஏற்படுத்தும் டிஜிட்டல் பலகை (Awareness Scrolling Display) ஆகியவை நிறுவப்பட்டுள்ளன.
அதேபோல், பாலத்தில் நான்கு இடங்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாலத்தில் போக்குவரத்து காவலர்கள் தினமும் சுழற்சி முறையில் போக்குவரத்து பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். பாலத்தின் மேலே 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வாகன ஒட்டிகள் மேம்பாலத்தில் 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மிகாமல் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.