திருச்சி ஜோசப் கல்லூரி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் சார்பில், மத்திய பட்ஜெட் 2020 குறித்த சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 160 பக்கங்கள் கொண்ட நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் என்ன சொல்ல வந்தார்? என்பது தற்போது வரை புரியாத புதிராக உள்ளது. ஆனால் எதை சொல்லவில்லை என்பது நன்றாக தெரிகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக நல்ல காலம் பிறக்கும், நல்ல காலம் பிறக்கும் என்று குடுகுடுப்பைக்காரன் போல் கூறி வந்தார்கள். ஆனால் இந்த முறை அதைக் கூறவில்லை. உண்மையிலேயே நாட்டின் பொருளாதார நிலை என்ன என்பது நமக்குத் தெரியும். எனினும் மத்திய அரசு நாட்டின் பொருளாதார நிலை குறித்த தனது மதிப்பீட்டை கூற வேண்டும். அது பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் நிதியமைச்சர், இதுகுறித்து கூறாதது வருத்தமளிக்கிறது.
பணமதிப்பிழப்பு குறித்து ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. நாட்டின் முதுகெலும்பு துறைகளான மின்சார உற்பத்தி, தொழில் உற்பத்தி மட்டுமே சிறிதளவு வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், இதர சுரங்கம், எண்ணெய் சுத்திகரிப்பு, எரிவாயு, நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற துறைகள் வளர்ச்சி அடையவில்லை. மாறாக வளர்ச்சி குறைந்துள்ளது" என்றார்.
அப்போது ஒரு மாணவர் ஏர் இந்தியா நிறுவனம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதில் கூறுகையில், "போட்டி மிகுந்த துறைகளான ஏர் இந்தியா மற்றும் பிஎஸ்என்எல் போன்ற பொது துறைகளை அரசு வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவற்றை அரசு கையில் வைத்திருப்பதால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாட்டில் மதசார்பின்மையும் குடியுரிமையும் சவாலாக உள்ளது - ப. சிதம்பரம்!