தமிழ்நாட்டின் இளம் சந்ததியினர் பாரம்பரிய உணவு முறையை சமைத்து சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்தோடு பாரம்பரிய உணவுமுறை சமையல் போட்டியை ஆண்டுதோறும் நடத்திவரும் ஜென்னீஸ் அகாடமி கேட்டரிங் கல்லூரி 14 ஆவது ஆண்டாக இன்று நடத்தியது.
இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 16 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.
காய்கறி, பழங்கள், கருப்பட்டி, பனை வெல்லம், பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட உலர் பழ வகைகள், முளை கட்டியப் பயறுகள், இயற்கை முறையில் விளைந்த உணவுப் பொருட்களை கொண்டு மாணவர்கள் உணவுகளை தயாரித்திருந்தனர். இந்த போட்டிக்கு கல்லூரி இயக்குனர் பொன் இளங்கோ தலைமை வகித்தார். நடுவராக பிரபல சமையல் கலைஞர் தாமு பங்கேற்று சிறந்த உணவைத் தயார் செய்த வெற்றியாளர்களை தேர்வு செய்தார்.
இந்த போட்டி குறித்து சமையல் கலைஞர் தாமு செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாம் தற்போது நவீன உணவு முறைக்கு மாறிக் கொண்டிருக்கிறோம். நவீன துரித ஜங்க் உணவு வகைகள் எப்போதாவது வேண்டுமானால் சாப்பிடலாம். ஆனால் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய நமது பாரம்பரிய முறையில் தயார் செய்யப்படும் தானியம் உள்ளிட்ட உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும். இதை வருங்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும் வகையில் பாரம்பரிய உணவு சமையல் முறை சிடியில் பதிவு செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளது. நாம் சாப்பிடும் உணவு நமது உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும்.” என்றார்.
முன்னதாக, இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ராம்ஜிநகர் பிராட்டியூர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவ - மாணவிகளின் இசை நிகழ்ச்சி ஒன்றும் நிகழ்த்தப்பட்டது. இந்த மாணவ மாணவிகள் தயார் செய்த சமையல் வகைகள் அனைத்தும் சிடி மூலம் பதிவுச் செய்யப்பட்டு தென்னிந்திய சமையல் கலைஞர்கள் சங்கத்திடம் அளிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க : வால்பாறை மலைப்பாதையில் விலங்குகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை