கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி ஆபத்தானபுரத்தை சேர்ந்தவர் ஐயப்பன் (44). இவர் தனது மகன் அருண்குமாரை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த அம்மன் கன்சல்டிங் டிரைனிங் சென்டர் என்ற டிராவல்ஸ் நிறுவனத்தை கடந்த 2016ஆம் ஆண்டு அனுகினார். இந்த மையத்தை நடத்தி வந்த புதுக்கோட்டை சேதுராப்பட்டியை சேர்ந்த கணேசன் (39) என்பவர் ஐயப்பனிடம் ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு, அருண்குமாருக்கு 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக உறுதியளித்தார்.
சேதுராப்பட்டி கணேசன், அருண்குமாருக்கு கொடுத்த விசா போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை திருப்பி கொடுக்குமாறு ஐயப்பன் கேட்டுள்ளார். ஆனால் கணேசன் பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்ததோடு, தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து ஐயப்பன் விமானநிலைய காவல்துறையினரிடம் புகார் செய்தார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கணேசனை தேடி வந்தனர்.
இந்நிலையில் திருச்சி கருமண்படம் நட்சத்திரா நகரில் கணேசன் தலைமறைவாக இருப்பதை அறிந்த காவல்துறையினர் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்த போலி விசா தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர். கணேசன் இதுபோல் மேலும் பல நபர்களிடம் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் கணேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.