மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்ராஜன் தலைமை வகித்தார். தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் தலைவர் குணசேகரன், ஏஐடியுசி நிர்வாகி சுரேஷ், ஐஎன்டியுசி நிர்வாகி துரைராஜ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
எல்.ஐ.சி., பி.ஹெச்.இ.எல்., சேலம் ஸ்டீல், பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரைவார்ப்பது, பெரு நிறுவனங்களுக்கு வரி குறைப்பு, முறைசாரா தொழிலாளர்கள் ஓய்வூதியம் உள்ளிட்ட செயல்களைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
பின்னர் சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் செய்தியாளரிடம் பேசுகையில், "நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார மந்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மத்திய அரசு தீர்வுகாண வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள நிதிநிலை அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்.
காலகாலமாகத் தொழிலாளர்கள் அனுபவித்துவரும் 46 வகையான சட்டங்களை நான்கு தொகுப்பாக மாற்றி ஒரு தொகுப்பை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. வரும் மக்களவைக் கூட்டத்தொடரில் மீதமுள்ள மூன்று தொகுப்பையும் நிறைவேற்றவுள்ளனர். அன்றைய தினம் இந்தியா முழுவதும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசு அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்" என்று எச்சரித்தார்.
இதையும் படிங்க: மக்களுக்கு தேவைப்பட்ட அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் - கெஜ்ரிவால்