தியாகி அருணாசலம் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி சிங்காரத்தோப்பில் உள்ள அவருடைய உருவச் சிலைக்கு திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. குழந்தைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள்.
அதனால் தான் ராகுல் காந்தி "ரேப் இன் இந்தியா" என அதைப்பற்றி பேசினார். அவர் எதற்காகப் பேசினார்? அவர் பேச்சின் அர்த்தம் என்ன? என்பதை தான் பார்க்க வேண்டுமே தவிர, அவர் பேசுவதை தனியாகப் பிரித்து அதற்கு ஒரு அர்த்தம் கற்பிக்கக் கூடாது! அதற்கு அவர் 'மன்னிப்பு கேட்க வேண்டும்' என கூறுவதும் சிறுபிள்ளைத்தனமானது.
திமுக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களை சந்தித்து தான் கட்சி நடத்தி வருகிறார்கள். யாரும் கார்ப்ரேட் நிறுவனங்களின் உதவியை நாடவில்லை. உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்காக எதிர்க் கட்சிகள் உச்ச நீதிமன்றம் செல்லவில்லை.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா பாகுபாட்டை ஏற்படுத்துவதாக தான் உள்ளது. இஸ்லாமியர்களையும், ஈழத் தமிழர்களையும் ஒதுக்குவதாக தான் இந்த சட்டம் உள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க: ராகுல் காந்தியின் பேச்சை சர்ச்சைக்குள்ளாக்கிய பாஜக? - களமிறங்கிய கனிமொழி