சென்னை: பள்ளிக்கல்வி முதல் உயர் கல்வி முதல் முழு செலவு, கட்டமைப்பை மேற்கொள்ளும் மாநில அரசுக்கே வேந்தர் பதவிக்கான உரிமையும் வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாக் கலையரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் லக்ஷ்மி வளர்தமிழ் நூலகத்தையும், அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழரின் ஈகைப் பண்பு: அதன் பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"வழக்கறிஞர், தொழிலதிபர் என்பதை கடந்து வள்ளல் அழகப்பர் கல்விக்காக செய்திருக்கும் தொண்டு தான், மிக மிக முக்கியமான தொண்டாகும். இந்தியா விடுதலை அடைந்தபோது சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த லட்சுமணசாமி முதலியார், அறியாமையில் இருந்து மக்களை விடுதலை அடைய செய்ய பின் தங்கிய பகுதிகளில் செல்வந்தர்கள் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அந்த மேடையில் இருந்த வள்ளல் அழகப்பர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து நான் கல்லூரி தொடங்க தயார் என்று உயர்ந்த உள்ளத்துடன் அறிவித்தார். கல்வி தொண்டையும், தமிழ் தொண்டையும் இணைந்து மேற்கொண்ட அவரால்தான் பலரும் பட்டங்கள் பெற்று உலகம் முழுக்க உயர்ந்துள்ளனர். தமிழரின் ஈகைப் பண்புக்கு அடையாளமாக திகழ்ந்தவர்.
வள்ளுவர் நெறி என்பது வாழ்வியல் நெறியாக மாற வேண்டும் என்று சொல்கின்றோம். குறள் நெறியை பின்பற்றினால் தான் தமிழகமும், உலகமும் காப்பாற்றப்படும். அப்படி காப்பற்றப்பட வள்ளுவரை யாரும் கபளீகரம் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வள்ளுவர், வள்ளலாளர் ஆகியோர் தமிழ் மண்ணில் சமத்துவம் பேசிய மாமனிதர்கள் ஆவர். அவர்களைக் களவாட ஒரு கூட்டமே சதி செய்து கொண்டிருக்கிறது. அதற்கு எதிரான காவல் அரணாக ஒவ்வொரு தமிழரும் திகழ வேண்டும்.
இதையும் படிங்க: 2 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கு ஆசி வழங்கிய திருச்செந்தூர் தெய்வானை யானை!
தமிழ் சமூதாயத்தை மேம்படுத்தும், தமிழ்நாட்டை வளப்படுத்தும். தமிழக இளைஞர்களை அனைத்து துறைக்கும் தகுதிப்படுத்தும் கல்வி தான் திருட முடியாத செல்வம் என்று மாணவர்களிடம் அடிக்கடி சுட்டிக் காட்டுகின்றேன். எனவே, அறிவு செல்வத்தை சேர்க்க பாடுபடுங்கள். அப்போது தான் பொருட்செல்வம் தானாகத் தேடி வரும்.
தமிழகம் முதலிடம்: திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு கல்விக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றோம். அதிக அளவு அரசு பல்கலைக்கழகங்கள் கொண்ட மாநிலமாக, அதிக அளவு மருத்துவ கல்லூரிகள் கொண்ட மாநிலமாக, 500 தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகள் கொண்ட மாநிலமாக, புகழ் பெற்ற 100 கல்வி நிறுவனங்களில் 31 உயர் கல்வி நிறுவனங்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகமாக 49 சதவிகிதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
பல்கலைக்கழகங்களில் நிர்வாகம் மாநில அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வேந்தர் பதவியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இருக்க வேண்டும். பள்ளி முதல் உயர் கல்வி வரை பார்த்து பார்த்து திட்டங்களை உருவாக்கி செலவு செய்வது, சம்பளம் கொடுப்பது, பல்கலைக்ககழகத்துக்கு உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்வது என மாநில அரசு செலவில் அனைத்தும் நடைபெறுகிறது. ஆனால், மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவி மட்டும் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஒருவருக்கா? இதுதான் நம்முடைய கேள்வியாக இருக்கிறது. அதனால் தான் இதற்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றோம். மாநில கல்வி உரிமையை மீட்கும் வரை சட்டப்போராட்டம் தொடரும்,"என்றார்.