கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே உள்ள நகை கடையில் ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி பழைய நகைகளை வைத்துவிட்டு எடை அதிகமான புதிய நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பாகலூர் போலீசார் நகை திருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட மூன்று பேரை தேடி வருகின்றனர்.
போலீசார் விசாரணையில், ஒசூர் அருகே உள்ள பாகலூரில் ராம்லால் (40) என்பவருக்கு சொந்தமான நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இக்கடைக்கு கடந்த 19 ஆம் தேதி பிற்பகல் 12 மணியளவில் இரண்டு பெண்களுடன் ஒரு ஆண் வாடிக்கையாளர் என மொத்தம் 3 பேர் வருகை புரிந்துள்ளனர்.
அங்கு, பல்வேறு தங்க நகைகளை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான நகையையும் தேர்ந்தெடுத்து வாங்கியுள்ளனர். பின்னர், வாங்கிய நகைக்கான பணத்தை கடை உரிமையாளரிடம் செலுத்தி நகையை கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து, வழக்கம் போல் கடையில் உள்ள நகைகளின் இருப்பு குறித்து கடை உரிமையாளர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது, நகை பெட்டிகளில் இருந்த சில நகைகள் சிறியதாக இருந்துள்ளது. இதனையடுத்து, அந்த நகைகளை எடுத்து எடை போட்டு பார்த்தபோது அந்த நகைகளின் எடை குறைவாக இருந்துள்ளது.
இதையும் படிங்க: மூன்றரை கிலோ தங்க நகைகளை அணிந்து அண்ணாமலையாரை வழிபட்ட தொழிலதிபர்!
இதனால், சந்தேகமடைந்த கடையின் உரிமையாளர், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அதில், முன்னதாக கடையில் தங்க நகைகள் வாங்க வந்த 2 பெண்கள் உட்பட 3 பேர், அவர்கள் வாங்கிய தங்க நகைக்கான பணத்தை செலுத்தும் பொழுது, கடையில் இருந்த வேறு சில நகைகளை பார்வையிட்டுள்ளனர்.
அப்போது, நகைகளை பார்வையிடுவது போல் நடித்து, கடை ஊழியர்களின் கவனத்தை திசைத்திருப்பி, அவர்கள் வைத்திருந்த எடை குறைவான சில நகைகளை நகை பெட்டிகளில் வைத்து விட்டு, எடை அதிகம் உள்ள நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர். இத்தகைய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, நகைக்கடையின் உரிமையாளர் ராம்லால், சிசிடிவி கேமரா காட்சிகளுடன் பாகலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, நூதன முறையில் நான்கரை சவரன் தங்க நகைகளை திருடி சென்ற இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.