திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் எம்.பி., ‘ஆழ்துளைக் கிணற்றிலிருக்கும் குழந்தையைக் காப்பாற்ற இன்னும் பல மணி நேரம் ஆகலாம் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். குழந்தை சுஜித்தை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவங்கள் நடைபெறுவது இதுவே கடைசியாக இருக்கட்டும். இதுபோன்ற சம்பவம் இனி இந்தியாவில் எந்த இடத்திலும் நடக்கக்கூடாது. செவ்வாய் கிரகத்துக்குச் செயற்கைக்கோளை அனுப்பும் நம்மிடம், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழும் குழந்தைகளைக் காப்பாற்ற என்ன கருவிகள் உள்ளது?’ என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய திருமா, ‘ஆழ்துளைக் கிணற்றில் விழும் சிறுவர்களைக் காப்பாற்ற தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை. மனிதர்கள் மூலம்தான் மீட்க முடியும் என்ற அரசு தரப்பின் விளக்கத்தை ஏற்க முடியாது. சந்திரனில் உள்ள கருவியை இங்கிருந்து இயக்குகிறோம். அதேபோல் ரிமோட் மூலம் குழந்தைகளை ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்க முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்’ என தெரிவித்தார்.
மேலும், நாடே சுஜித் நலமுடன் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்துவருவதாகவும் ஆழ்துளைக் கிணறுகள் குறித்த பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக எழுப்பவுள்ளதாகவும் திருமாவளவன் கூறினார்.
முன்னதாக, தொல். திருமாவளவன் மீட்புப் பணிகள் குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அதோடு சுஜித்தின் பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதலும் தெரிவித்தார்.