திருச்சி: காதலுக்கு கண் இல்லை என்று சொல்லும் இந்த காலத்தில், ஒரு தலையாக காதலித்த பெண்ணின் கண்களை ஆட்டோவில் வரைந்த இளைஞரின் செயலால், ஆத்திரமடைந்த பெண் வீட்டார், இளைஞரின் தாயாரை வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதி அருகே உள்ள காளவாய்ப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவர், செல்வகுமாா் (19). இவர் அருகில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை, ஒரு தலையாக நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.
செல்வகுமார் உடன் பள்ளியில் ஒன்றாக படித்து வந்த மாணவியுடன் அவர் நட்பாகப் பழகி வந்துள்ளார். நாளடைவில் அந்தப் பெண் மீது காதல் வயப்பட்ட செல்வகுமார், அந்த பெண்ணின் கண்களை தனது ஆட்டோவில் வரைந்துள்ளாா். இதனை அறிந்த பெண்ணின் உறவினா்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன் மண்ணச்சநல்லூா் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில் செல்வகுமாரை, அழைத்த போலீசார் வாகனத்தில் வரைந்துள்ள கண்களை அகற்றி விடும்படி கண்டித்து அணுப்பியுள்ளனர். சில நாட்களுக்குள் அகற்றி விடுவதாக போலீசாரிடம் உறுதி அளித்த செல்வக்குமார், ஆட்டோவிலிருந்து பெண்ணின் கண்களை அகற்றாமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் அண்ணன் விக்ரம் உள்ளிட்ட 14 போ் இரண்டு நாட்களுக்கு முன்பு காளவாய்ப்பட்டியில் உள்ள செல்வகுமாரின் வீட்டிற்குச் சென்று அவரது தாய் கமலம் (40), அண்ணன் கோபிநாத் (25), செல்வக்குமார் ஆகிய மூவரையும் சராமாரியாக தாக்கி ஆட்டோவையும் அடித்து நொறுக்கி, வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து செல்வகுமார், அண்ணன் கோபிநாத் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், தாக்குதலில் ஈடுபட்ட விக்ரம் (20), சரண் (22), வினோத் (23), கெளதம் (35), சுதர்சன் (19), பிரசாந்த் (22), லோகேஸ்வரன் (19), வேலவன் (20), குமரேசன் (28), பாலு (23), பிரவீன் (24), மணிமாறன் (33), சதிஷ்(28), மணிகண்டன் (37) ஆகிய 14 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3-ல் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
நட்பாகப் பழகி வந்த பெண்ணை ஆட்டோ ஓட்டுநரான செல்வகுமார் ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், பெண் தரப்பினர் 14 பேர் வீடு புகுந்து, செல்வகுமார் மற்றும் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி வாகனங்களையும், சேதப்படுத்திய சம்பவம் மண்ணச்சநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.