திருச்சி: மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி புறநகர் மாவட்ட 23ஆவது மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. அதன் ஒரு நிகழ்வான செம்படைப்பேரணி கோவில்பட்டி சாலை எடத்தெருவில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக பெரியார் திடலை சென்றடைந்தது.
பேரணியில் ஆட்டோ அணிவகுப்பு மற்றும் ஒயிலாட்டம், கோலாட்டம், சிலம்பம், கும்மியடி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் பேரணியால் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அப்போது,கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகே 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் சுமார் கால் மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டது. அதேபோல், திருச்சி சாலையில் இருந்து வந்த தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று மாரியம்மன் கோயில் முன்பகுதியில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டது.
இந்த நிலையில் அங்கிருந்த போக்குவரத்து காவலர் சரவணன் துரிதமாக செயல்பட்டு ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதனைத்தொடர்ந்து போக்குவரத்து காவலர் கட்சி நிர்வாகிகளிடம் சென்று சாலையின் ஒரு பாதியில் பேரணியாக செல்லுங்கள் எனவும்; ஆம்புலன்ஸ் செல்ல வழி வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஆனால், அதனை ஏற்க மறுத்த கட்சிப்பிரமுகர் ஒருவர், 'ஆம்புலன்ஸ் வந்தால் நாங்கள் பார்த்துக்கொள்வோம்' என வாக்குவாதத்தில் ஈடுபட்டு போக்குவரத்து காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தார், உடனடியாக உடனிருந்தவர்கள் கட்சிப்பிரமுகரை உடன் இருந்த கட்சி நிர்வாகிகள் ஓரங்கட்டினர்.
இதைக் கண்ட வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் பேரணி நடத்தியது மட்டுமல்லாமல், போக்குவரத்து காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நபரையும் வசைபாடிச் சென்றனர்.
இதையும் படிங்க: அடிப்படை வசதிகள் இன்றி வாழும் நரிக்குறவர் மக்கள் - சிறப்பு தொகுப்பு...