சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் ஆனந்தகுமார் (23). இவர் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் வேலைசெய்து வந்தார். இவர், திருச்சி காட்டூர், காந்திநகரில் உள்ள அவரது உறவினர் செந்தில்குமார் வீட்டிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்றார். ஊரடங்கு உத்தரவின் காரணமாக சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் ஆனந்தகுமார் அங்கேயே தங்கிவிட்டார்.
இந்நிலையில், ஆனந்தகுமார் இன்ஸ்டாகிராம் செயலியின் மூலம் ஒரு பெண்ணோடு முகம் பார்க்காமல், பேசி, பழகி, காதலித்து வந்தார். அவரிடம் பேசிப் பழகியது பெண் தானா என்பதுகூடத் தெரியவில்லை. எனினும் ஆனந்தகுமார் அந்த பெண்ணை தீவிரமாக காதலித்துவந்தார்.
சில தினங்களுக்கு முன்பு அந்தப் பெண் ஆனந்தகுமாரின் காதலுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பெண் பயன்படுத்திய இன்ஸ்டாகிராம் கணக்கையும் முடக்கம் செய்துவிட்டார். இதனால், மனமுடைந்த ஆனந்தகுமாருக்கு அவரது உறவினர்கள் ஆறுதல் கூறினர்.
எனினும் காதல் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத ஆனந்தகுமார். அவரது உறவினர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானவேலன் உள்ளிட்ட காவல் துறையினர், ஆனந்தகுமாரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை செய்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் செயலியின் மூலம் பழகியது ஆணா? பெண்ணா? என்பது கூட தெரியாமல் உருகி உருகி காதலித்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஈகைப் பெருநாளில் இந்து காதலரை கரம்பிடித்த இஸ்லாமியப் பெண்