தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள், ''அமைச்சரவையை கூட்டாமல் தமிழ்நாடு அரசு நேற்று இரண்டு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு வரும் காலாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
இத்திட்டம், புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சம். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை மற்ற எந்த மாநிலங்களும் இதுவரை அமல்படுத்தவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி பெறாத சூழ்நிலை ஏற்பட்டு பள்ளியிலிருந்து இடையில் நிற்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும். இதனால் தமிழ்நாடு அரசு அரசாணாஇயை திரும்ப பெற வேண்டும்.
இதற்கு அடுத்தபடியாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இருந்த இரண்டு மொழி தாள்களை ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் மொழி கல்வி பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது. மாணவர்கள் மத்தியில் மொழி அறிவு இல்லாத சூழ்நிலை உருவாகும். இரண்டாம் தாளில் தான் கட்டுரை, இலக்கணம், பொது அறிவு போன்றவை இடம்பெறும். இஹனால் மாணவர்களின் அடிப்படை கல்வியை வளர்ச்சியை பாதிக்கும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது ஏழை எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை பறிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளது.
மூன்று வயது குழந்தை மும்மொழிகளை கற்பது என்பது சாத்தியம் இல்லை. அதனால் புதிய கல்விக் கொள்கையை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும். ஆசிரியர் கூட்டணியின் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 24ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்'' என தெரிவித்தார்.