திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாஜக பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழ்நாட்டில் நிலையான ஒரு ஆட்சி இருக்க வேண்டும், மத்தியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர வேண்டும் என்பதை எண்ணி வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். தற்போது பல குற்றச்சாட்டுகளை கூறும் ஸ்டாலின், அவர்களின் ஆட்சி காலத்தில் பணியாற்றியிருந்தால் தண்ணீர் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டி வந்திருக்காது.
காவிரி பிரச்னை இன்று ஓரளவுக்கு முடிவுக்கு வந்ததற்கு பிரதமர் மோடியின் அரசுதான் காரணம். திமுக- காங்கிரஸ் கூட்டணி மத்தியிலும், மாநிலத்திலும் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் அதற்கு நிரந்தர தீர்வு கொண்டு வரவில்லை. மே 23ஆம் தேதி மாற்றம் ஏற்படும் என்று ஸ்டாலின் கூறுவது நடக்காது. மாநில ஆட்சி வலுப்பெறுவதோடு மத்தியில் தாமரை நிச்சயமாக மலரும்.
கமல்ஹாசன் தேவையில்லாமல் சில கருத்துக்களைக் கூறியிருப்பது, அவரின் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. இது முதிர்ச்சியின்மையா? அல்லது இப்படி பேசினால்தான் அவருக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் வரும் என்று நினைக்கிறாரா? என்பது எனக்கு தெரியவில்லை.
சினிமாவில் நடித்து பிரபலம் ஆகிவிட்டோம் என்பதால் என்ன பேசினாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறார். கமலுக்கு அரசியலில் இன்னும் அதிக பக்குவம் தேவை. தேர்தல் நேரத்தில் பிரிவினையை தூண்டும் வகையில் பேசக்கூடாது.
ஆனால் இங்கே கமல் பலரது மனம் புண்படும் அளவிற்கு பேசியுள்ளார். இதற்கு எதிர் விளைவு வரும் என்பதை உணர்ந்து அவர் பேசியிருக்க வேண்டும். பிரிவினை கருத்துக்களை ஏன் பேச வேண்டும்? சினிமாவில் எதிர்க் கருத்து கூறினாலே எதிர்ப்பு கிளம்புகிறது. கமலுடன் பாஜக ரகசிய உடன்பாடு வைக்குமளவுக்கு எவ்வித உறவும் கிடையாது. பாஜகவின் உறவுகள் அனைத்தும் வெளிப்படையான உறவுகள்.
திமுக - தினகரன் இடையேதான் ரகசிய உறவுகள், சந்திப்புகள் நடைபெறுகின்றன. ஹைட்ரோ கார்பன் திட்டம் சில நிறுவனங்களுக்கு பரிசோதனை அடிப்படையில்தான் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் மறுபரிசீலனை செய்யப்படும். பாஜக எப்போதும் தமிழக மக்களுடன்தான் இருக்கும் என்றார்.