கடந்த மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் சவுதி அரேபியா, மலேசியா, இந்தோனேஷியா போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். மாநாடு முடிவடைந்ததும், பங்கேற்பாளர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்றடைந்த நிலையில் சிலருக்கு கரோனா பெருந்தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
காஷ்மீரைச் சேர்ந்த முதியவர் இறந்த பிறகுதான், மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கோவிட்-19 பரவிய அபாயம் தெரியவந்தது. இந்த மாநாட்டில் பங்கெடுத்த 2 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
குறிப்பாக, தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, மேற்குவங்கம் மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அங்கே தடுத்துவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவந்தனர். 14 நாள்கள் தடுப்புக்காலம் முடிந்து, தொற்று பாதிப்பில்லை என உறுதிசெய்யப்பட்ட நிலையில் ஊரடங்கு காரணமாக அவர்கள் தாயகம் திரும்ப முடியாத சூழல் நீடித்துவந்தது.
இந்நிலையில், தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்குச் சென்றவர்கள் 292 பேரும், டெல்லியில் பணிபுரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் 266 பேரும் டெல்லியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் நேற்று திருச்சி வந்தடைந்தனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் தொழிலாளர்கள் அனைவரும் அவரவர் சொந்த மாவட்டங்களுக்குத் தகுந்த இடைவெளியோடு அனுப்பிவைக்கப்பட்டனர்.
தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்குச் சென்ற 292 பேரும் ரயில் நிலையத்திலிருந்து தனியார் கல்லூரி பேருந்துகள் மூலம் காஜாமலை பகுதியில் உள்ள அரபு கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த ஏற்பாடுகளை திருச்சி ஆட்சியர் சிவராசு, ரயில் நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இதையும் படிங்க : உ.பி. தொழிலாளர்கள் 1,425 பேர் ரயிலில் அனுப்பிவைப்பு