திருச்சி: கடந்த ஆண்டு அக்டோபரில் ஒன்றிய அரசு புதிய வேளாண் சட்டங்களை அறிமுகம் செய்தது. இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வை அழிக்கக் கூடியது, இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனையடுத்து, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி டிராக்டர்களில் படையெடுத்தனர். அமைதியாக நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதால், டெல்லியே வன்முறை பூமியானது.
ஒரு வாரம் போராட்டத்தில் பங்கேற்பு
தடியடியில் பல விவசாயிகள் படுகாயமடைந்தனர். பலர், தற்கொலை செய்து கொண்டனர். இருப்பினும் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மறுத்த விவசாயிகள், கடும் குளிரையும் பொருட்படுத்தாது வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை என தெரிவித்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் புறநகர் மாவட்ட செயலாளர் வெ. சிதம்பரம் தலைமையிலான 20க்கும் மேற்பட்டோர் மணப்பாறையில் இருந்து ரயில் மூலம் டெல்லி சென்றனர்.
பின்னர், டெல்லி - ஹரியானாவின் எல்லைப் பகுதியான சிங்கூரில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் ஒரு வாரம் பங்கேற்று, இன்று (ஆக.14) அவர்கள் மணப்பாறை வந்தடைந்தனர். மணப்பாறையை வந்தடைந்த விவசாய சங்கத்தினரை, பிற நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
கொட்டகையில் இடம் கொடுத்த விவசாயிகள்
டெல்லி சென்று விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு திரும்பியது குறித்து, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் புறநகர் மாவட்ட செயலாளர் வெ. சிதம்பரம் நமது ஈ-டிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
அதில், “ஒன்றிய அரசின் மூன்று புதிய வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, கடந்த எட்டு மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லியின் எல்லைப் பகுதியில் உள்ள சாலைகளில் ஆறு இடங்களில் முகாம் அமைத்து கடும் குளிரையும் பொருட்படுத்தாது போராடி வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், போராட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றோம். எங்களை வரவேற்ற விவசாயிகள், அவர்கள் தங்குவதற்காக போடப்பட்டிருந்த கொட்டகையில் எங்களுக்கு இடமளித்தனர். மேலும், எங்களுக்காக தமிழ்நாட்டு உணவு வகைகளையும் சமைத்துக் கொடுத்தனர்.
கூடுதல் விவசாயிகளைத் திரட்ட திட்டம்
டெல்லிப் போராட்டத்தில் உள்ளவர்கள், தமிழ்நாட்டு மக்கள் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளார்களா? என்று கேட்டனர். அதற்கு நாங்கள், கடந்த எட்டு மாத காலமாக கருப்புக்கொடி போராட்டம், சட்ட நகல் எரிப்பு போராட்டம், முற்றுகைப் போராட்டம், வேலைநிறுத்தப் போராட்டம், மிகப்பெரிய அளவில் மனித சங்கிலி போராட்டம் ஆகியவற்றை நடத்தி முடித்தோம் என தெரிவித்தோம்.
போராட்டத்தை ஒடுக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தையும், விவசாயிகள் எங்களிடம் பகிர்ந்துகொண்டனர். இதனை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்து, கூடுதல் விவசாயிகளைத் திரட்டி டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை வலுவானதாக மாற்ற முடிவெடுத்துள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: வேளாண் வளர்ச்சித்திடல் அமைப்பு திட்டத்துக்கு வரவேற்பு