திருச்சி தேசியக் கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணி எப்போது தொடங்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், 'ஏப்ரல் 2ஆம் தேதி ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்படும். அனைத்துக் கட்டுமானப் பொருள்களும் தயாராக இருப்பதால், விரைவில் பணி தொடங்கும். இரண்டு ஆண்டுகளில் கோயிலைக் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல் காசி விசுவநாதர் கோயிலின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டுள்ளது. அதையும் மாற்றுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக என் தலைமையிலான சன்னியாசிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது' என்றார்.
சசிகலா குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், 'சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் மாற்றம் ஏற்படும். அது குறித்த விவரத்தை தற்போது வெளியிட முடியாது. அவருக்குப் பின்னால் ஒரு சமூகம் இருப்பதாலும், அரசியல் அனுபவம் இருப்பதாலும் நிச்சயம் மாற்றம் நடந்தே தீரும்' என்றார்.
இதையும் படிங்க: 'தலைவி' படத்தில் சசிகலா கேரக்டரில் பிரபல ஹீரோயின்!