திருச்சி: தமிழ்நாட்டில் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்களுக்கு பக்தர்கள் வழிபட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஊர்கூடித் தேர் இழுப்போம் என்பார்கள், பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே காண்பதற்கு என்றென்றும் ஆனந்தமே, ஆமாங்க வருடம் 365 நாள்களும் ஏதாவது ஒரு திருவிழா நடைபெற்றுக்கொண்டே இருக்கும். இத்திருக்கோயிலில் அனைத்து விழாக்களும் ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் சிறப்பு என்றே சொல்லலாம், அந்த வகையில் தைத்தேர் உற்சவம் கோயிலுக்குள் நடந்து வருகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தேரோட்ட உற்சவம் நிலைத்தோர் வைபவமாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 19-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. தைத்தேரோட்ட உற்சவத்தையொட்டி தினமும் காலையும், மாலையும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி உத்திரை வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்.
தற்போது கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அனைத்து உற்சவங்களும் கோயில் வாளகத்திலேயே நடைபெற்று வருகின்றன. தைத்தேர் உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஜனவரி 17) நடைபெற வேண்டும்.
தேரோட்டத்தின்போது அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைவது வழக்கம், ஆனால் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் தைத்தேரோட்டத்திற்கு பதிலாக நிலைத்தேர் உற்சவம் நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்குத் தேரில் எழுந்தருளினார். பின்னர் அங்கிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு தாயார் சன்னதியை சென்றடைந்தார். தேரோட்டம் நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.