திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் எழில்நகரைச் சேர்ந்தவர் முத்துச்செல்வி (28). இவர் மலைக்கோயில் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சப்ளையராகப் பணிபுரிந்துவந்தார். அதே ஹோட்டலில் பணிபுரிந்த கண்ணன் என்பவரைக் காதலித்து கடந்த வருடம் ஜூன் மாதம் வயலூர் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். வரதட்சணையாக 15 சவரன் நகையும் இருசக்கர வாகனமும் பெண் வீட்டார் சார்பில் கொடுக்கப்பட்டது.
சில நாள்ளுக்குப் பின்னர் கண்ணன் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு, முத்துச்செல்வியைக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருவெறும்பூர் மகளிர் காவல் நிலையத்தில் முத்துச்செல்வி புகார் செய்தார். காவல் துறையினரின் விசாரணையில் கண்ணன், முத்துச்செல்வியுடன் வாழ மறுத்துவிட்டார்.
தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின், கண்ணன் வீட்டுக்கு முத்துச்செல்வி சென்றார். அப்போது முத்துச்செல்வியை அனைவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த முத்துச்செல்வி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி முத்துச்செல்வி இன்று (ஜூலை 28) மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார். அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் அவரைத் தடுத்துநிறுத்தினர்.
மேலும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் உறுதியளித்து அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.