திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று காலை நடந்தது. இதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வுசெய்தனர்.
அதையடுத்து மாவட்ட ஆட்சியர் சிவராசு செய்தியாளர்களிடம் பேசுகையில், ''நேற்று இரவு 10 மணிவரை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்து போக்குவரத்து இருந்தது. இதையடுத்து இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கி முழு அளவில் நடைபெற்றுவருகிறது.
50 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு எளிதாக நோய்த்தொற்று ஏற்படும் என்பதால், அவர்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காககூட வெளியில் வரக் கூடாது. இந்த நோயைக் கண்டு அச்சப்பட வேண்டிய தேவையில்லை.
தற்போது கரோனாவுக்கான ரத்த பரிசோதனை மையம் திருச்சி அரசு மருத்துவமனையிலேயே நடைபெறுகிறது. அதனால் கடந்த 10 நாள்களுக்கு முன்பு வெளிநாடுகள் சென்று வந்தவர்களிடம் பொதுமக்கள் யாரேனும் நெருங்கிப் பழகியிருந்தால் உடனடியாக 1077 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனைகள் பெறலாம். அவர்கள் எந்த மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும், என்ன பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்படும்.
வீடுகள் இல்லாதவர்கள், ஆதரவற்றோர்களுக்கு உணவளிக்கும் வகையில் சமுதாய சமையல் கூடங்கள் திருச்சி மாநகரில் மூன்று இடங்களிலும், புறநகரில் 14 ஒன்றியங்களிலும் அமைக்கப்படுகின்றன. இந்தச் சமையல் கூடங்கள் நாளை முதல் செயல்படும்'' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா அறிகுறி: திருச்சியில் 3 வயது குழந்தை உள்பட இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதி