தஞ்சாவூர்: மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பலப் படங்களில் நடித்து திரை உலகில் தனி இடத்தைப் பெற்று, ரசிகர்கள் மற்றும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாக இன்றளவும் இருந்து வருகிறது. சிவாஜி கணேசன் நடித்த பல படங்களின் வசனங்கள் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் தாதா சாகிப் பால்கே விருது, செவாலியே பட்டம் ஆகியவற்றையும் சிவாஜி கணேசன் பெற்று உள்ளார். அதேநேரம், சிவாஜி கணேசனின் திரைப்படங்கள் மட்டுமல்லாது அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், மறைந்த சிவாஜி கணேசனின் 22ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஜூலை 21) அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில், தஞ்சாவூரில் அகில இந்திய சிவாஜி மன்றம் மற்றும் சோழ மண்டல சிவாஜி பாசறை சார்பில் தஞ்சை மணிமண்டபம் பகுதியில் உள்ள சிவாஜியின் முழு உருவச் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சோழ மண்டல சிவாஜி பாசறைத் தலைவர் வெங்கட்ராமன், "திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டு உள்ள சிவாஜி கணேசன் சிலையை உடனடியாக திறக்க வேண்டும். இது குறித்து அமைச்சர் கே.என்.நேருவைச் சந்தித்து தெரிவித்து உள்ளோம்.
அவ்வாறு சிலையை திறக்கவில்லை எனில், வருகிற அக்டோபர் 1ஆம் தேதி சிவாஜி கணேசன் பிறந்தநாள் அன்று தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு வீடு முன்பு முற்றுகை போராட்டம் அனைத்து சிவாஜி ரசிகர்கள் மற்றும் மன்றங்கள் சார்பில் நடத்தப்படும்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ‘செவாலியே சிவாஜி கணேசன் ரயில் நிலையம்' என்று பெயர் சூட்ட வேண்டும். சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்க வேண்டும். சென்னை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு இடங்களிலும் சிவாஜி கணேசனின் முழு உயரச் சிலை வைக்க வேண்டும். சிவாஜி கணேசன் பெயரால் தமிழ் விருது ஆண்டுதோறும் வழங்க வேண்டும். சிவாஜி கணேசன் பிறந்த நாளான அக்டோபர் 1ஆம் தேதியை கலை, இலக்கியம் மற்றும் பண்பாடு நாளாக அறிவித்து அரசு விழா எடுக்க வேண்டும்" என தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சோழ மண்டல சிவாஜி பாசறைத் தலைவர் வெங்கட்ராமன் மற்றும் அதன் நிர்வாகிகள் சந்திரசேகரன், பாஸ்கர், கணேசன் உள்ளிட்ட சிவாஜி ரசிகர் மன்றத்தினர் கலந்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட சிவாஜி கணேசன் சிலையை திறக்க பிரபு கோரிக்கை