திருச்சி: காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் 200 படுக்கைகள் கொண்ட சித்தா கரோனா புத்துணர்வு மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு இன்று (மே.16) திறந்து வைத்தார்.
இதுகுறித்து, திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’’தமிழ்நாட்டில் முதன்முறையாக 200 படுக்கைகள் கொண்ட சித்தா புத்துணர்வு மையம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். கரோனா நோயாளிகள் இந்த மையத்தில் தங்கி சிகிச்சைப் பெறலாம். கரோனா தொற்று வந்த பிறகும், வருவதற்கு முன்பு தடுக்கவும் இங்கு மருந்துகள் வழங்கப்படும்.
கரோனா இல்லாத மாவட்டமாக இதனை மாற்ற மக்கள் ஆதரவளிக்க வேண்டும். இங்கு சித்த மருத்துவர்கள் மட்டுமே பணியில் இருப்பார்கள். ஆக்சிஜன் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகள் நவீன மருத்துவத்திற்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்’’ என்று கூறினார்.
இதுகுறித்து அமைச்சர் நேரு கூறுகையில் ’’அரசு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காதவர்கள் சித்த மருத்துவத்தை நம்பி இங்கு வர வேண்டும். அந்த நோக்கத்தோடு இந்த புத்துணர்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சித்த மருத்துவம் மீது நம்பிக்கை வைத்து வர வேண்டும். நோய் குணமாக சற்று காலதாமதம் ஆனாலும், சித்த மருத்துவம் மூலம் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
இம்மையத்தில் கரோனா நோயாளிகளுக்கான சித்த மருந்துகளான கபசுரக் குடிநீரும் நிலவேம்பு குடிநீரும் காலை ஆறு மணிக்கு வழங்கப்படும். அதைத் தொடர்ந்து வாய் கொப்பளித்தல், நடைபயிற்சி, எட்டு வடிவ நடைபயிற்சி, ஆவி பிடித்தல், யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படும்.
ஆரோக்கியமான உணவுகள் மூன்று வேளையும் வழங்கப்பட இருக்கிறது. நோயாளியின் அறிகுறிகளுக்கேற்ப சித்த மருந்துகளான அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம், காய்ச்சலுக்கு பிரம்மானந்த பைரவ மாத்திரை, சளி, இருமலுக்கு தாளிசாதி வடகம், ஆடாதோடை மணப்பாகு, தலைவலிக்கு நீர்க்கோவை மாத்திரை, பெயின் பாம், நுகர்வுத் தன்மைக்கு ஓமப்பொட்டணம், உடல்வலிக்கு விஷ்ணு சக்கர மாத்திரை போன்ற மருந்துகள் கொடுக்கப்படும்.
இவ்வளாகத்தில் மனக் கவலையை போக்கும் பாரம்பரிய விளையாட்டுகளை நினைவுபடுத்தும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சித்தா மையத்தில் நோயாளிகள் நேரடியாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று முறையாக பதிவு பெற்று பின்பு சித்த மருத்துவ புத்துணர்வு மையத்திற்கு வர வேண்டும். இங்கு பரிசோதனை முடிவுகளையும், மருத்துவர் பரிந்துரைக் கடிதத்தையும் கொண்டுவர வேண்டும்’’ என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், காடுவெட்டி தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி பொறியாளர் அமுதவல்லி, சித்த மருத்துவர்கள் தமிழ் கனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பைக் வாங்க வைத்திருந்த பணம்: கரோனா நிதிக்கு வழங்கிய மாணவன்!