திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பஞ்சப்பிரகார விழா தொடர்ந்து 18 நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். சமயபுரத்தில் நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகார உற்சவம் என்பது வசந்த உற்சவம் ஆகும். மேலும்,பஞ்ச பூதங்கள், ஐம்பெரும் தொழில், ஐம்பெரும் கலை, ஐம்பெரும் பீடம், ஐம்பெரும் உயிர் அவத்தைகள் இவற்றை விளக்கும் தத்துவமாக பஞ்சப்பிரகார உற்சவம் விளங்கும்.
இதேபோல், இந்த ஆண்டு பஞ்சப்பிரகார விழா கடந்த 6ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. தினந்தோறும் மாரியம்மன் பல வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், நேற்று முன்தினம் அம்மன் ரிஷப வாகனத்தில் வசந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சன்னதி மற்றும் தேரோடும் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.