கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு ழுமுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு, நான்காம் கட்டமாகமே 31ஆம் தேதிவரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தளர்வின் அடிப்படையில், தனிநபர் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் சலூன் கடைகள், பியூட்டி பார்லர்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் திருச்சி மாவட்ட, மாநகர முடிதிருத்தும் தொழிலாளர்கள் பாதுகாப்பு நலச்சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் தர்மலிங்கம் உள்ளிட்ட உறுப்பினர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை வழங்கினர்.
இதுகுறித்து சங்கத் தலைவர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஊரடங்கு நீடிக்கும் வரை மாதந்தோறும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். சலூன் கடைகள் பெரும்பாலும் வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன. இவற்றுக்கு வாடகை கொடுக்க முடியாமல் தொழிலாளர்கள் கஷ்டப்படும் சூழல் உள்ளது. முடிதிருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சலூன் கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: தீவிரமடையும் ஆம்பன் புயல்: துரித தகவல்கள் உடனுக்குடன்...