திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பாளர், தனிப்பிரிவு காவல் துறையினர் ஆகியோர் சேர்ந்து கள்ளச்சாராய ஊறல், பழச்சாறு ஊறல்கள் போன்றவற்றை கண்டறிந்து அதனை தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் பால் சுந்தர் உத்தரவின்பேரில், காவல் உதவி ஆய்வாளர் சதிஷ்குமார் தலைமையிலான தனிப்படை காவலர்கள், புத்தாநத்தம் அருகேயுள்ள சிலம்பம்பட்டியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு கள்ளச்சந்தையில் பெங்களூரு மதுபாட்டில்களை விற்பனை செய்த ஆசைதம்பி, சேகர் ஆகியோரிடமிருந்து 96 மது பாட்டில்களை காவலர்கள் பறிமுதல் செய்து புத்தாநத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர்களை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.