திருச்சி: மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சனிக்கிழமை(நேற்று) வந்த விமானத்தில் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தபோது அவர் கணினிக்கு தேவையான மோடம், கூலர் ஃபேன்களை வைத்திருந்தார்.
இதனால் அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதனால் அந்த பொருட்களை தீவிரமாக ஆராய்ந்தனர். அப்போது மோடம், கூலர் ஃபேன்களில் பொருத்தி இருந்த ஸ்குரூக்கள் வித்தியாசமாக பொருத்தப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஸ்க்ரூக்களை கழட்டி பிரித்து பார்த்த போது, ஸ்க்ரூக்களின் இடைவெளியில் கம்பி வடிவில் தங்கம் இருப்பது தெரியவந்துள்ளது.
அதிகாரிகள் மொத்த ஸ்க்ரூக்களையயும் பிரித்து பார்த்த போது அதன் உள்ளே கம்பி வடிவில் 647 கிராம் எடையுள்ள தங்கம் இருந்துள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் அந்த ஆண் பயணி கடத்தி வந்த 179 கிராம் எடையுள்ள 2 தங்க சங்கிலிகள், 647 கிராம் எடையுள்ள தங்க கம்பிகள் என்று மொத்தம் 826 கிராம் எடையுள்ள சுமாா் ரூ.46,35,512 மதிப்புடைய தங்கத்தை பறிமுதல் செய்தனர். திரைப்பட பாணில் நூதனமாக தங்கத்தை மறைத்து வைத்து, கோலாலம்பூரில் வந்த பயணி தங்கத்தை எங்கிருந்து யாருக்காக கடத்தி வந்தார் என சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.