திருச்சி: முசிறியில் அமைந்துள்ளது சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலில் இருந்த 4 பழமையான செப்புப் பட்டயங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று இந்து சமய அறநிலையத் துறையின் சுவடித் திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கண்டறியப்பட்ட செப்புப்பட்டயங்கள் குறித்து அவர் கூறியதாவது, "தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள 46,020 கோயில்களில் உள்ள அரிய பழஞ்சுவடிகள், செப்புப்பட்டயங்கள் மற்றும் செப்பேடுகள் போன்றவற்றை ஒன்று திரட்டிப் பராமரித்து நூலாக்கம் செய்ய 'சுவடித் திட்டப் பணிக்குழு' அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இதுவரை 484 கோயில்களில் கள ஆய்வு செய்து 1,80,280 சுருணை ஏடுகள் (தோராய மதிப்பீடு), 358 இலக்கியச் சுவடிக்கட்டுகள் (32,133 ஏடுகள்), 6 தாள் சுவடிகள், 12 செப்பேடுகள், 25 செப்புப்பட்டயங்கள், 2 வெள்ளி ஏடுகள் மற்றும் 1 தங்க ஏடும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 48,691 ஏடுகள் முறையாகப் பராமரித்து பாதுகாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் முசிறி சந்திரமௌலீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ப.சௌந்திரபாண்டி, சுவடி கள ஆய்வாளர் கோ.விசுவநாதனைத் தொடர்பு கொண்டு தங்கள் கோயிலில் 4 செப்புப்பட்டயங்கள் உள்ளன. அதைப் பிரதி செய்து தர முடியுமா? என்று கேட்டார். அதன் அடிப்படையில் எனது தலைமையில் முனைவர் வெ.முனியாண்டி, க.தமிழ்ச் சந்தியா, கு.பிரகாஷ் குமார் ஆகியோர் கோயிலுக்கு நேரடியாகச் சென்று செப்புப்பட்டயங்களைப் பார்வையிட்டு மின்படியாக்கம் செய்தோம். பின்னர் 4 செப்புப்பட்டயங்களையும் முறையாகப் பிரதி செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
பிரதி செய்யப்பட்ட செப்புப்பட்டயங்களில் உள்ள செய்திகள்: விஜயநகர அரசர்களின் திக் விஜய சிறப்பு, நாயக்க மன்னர்கள் பேரில் செய்யப்பட்ட புண்ணிய தர்மக்கட்டளை, மகாசனங்கள் நாயக்கமன்னர்கள் பேரில் ஏற்படுத்திய தர்மக் கட்டளை மானியம், செட்டியார்கள் நாயக்க மன்னர்கள் பேரில் அர்த்த சாம பல்லக்குச் சேர்வை கட்டளை நிறுவியது, அயிலுசீமை கால சந்திக்கட்டளை தர்மம் நிறுவியது முதளியன கண்டுபிடிக்கப்பட்ட செப்புப்பட்டயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜயநகர அரசர்களின் திக் விஜய சிறப்பு: முசிறி கோயிலில் கிடைத்துள்ள 4 செப்புப்பட்டயங்களிலும் தெடக்கநிலைச் செய்தியாக விஜய நகர மன்னர்களின் வெற்றிச் சிறப்பும் பட்டப்பெயர்களும் திக் விஜயம் செய்த நிலையும் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, விஜயநகரப் பேரரசர்கள் ஈழத்தை வென்றது. துலுக்கர், ஒட்டியரை வென்றது, சோழ மண்டலத்தையும் பாண்டிய மண்டலத்தையும் வென்றது பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
மேலும் விஜய நகர பேரரசை ஆண்ட மன்னர்கள், பாளையக்காரர்கள் செப்பேடுகளை வெளியிடும் போது தங்கள் முன்னோர்களின் வெற்றிப் பெருமைகளையும் முன்னோர் பெயர்களையும் குறிப்பிடும் மரபின் அடிப்படையிலான விஜய நகர அரசர்களின் அரிய பல பெயர்கள் இப் பட்டயங்களில் காணப்படுகிறது. செப்பேடுகளின் இறுதியில் தர்ம கட்டளைகளைப் பரிபாலனம் பண்ணுபவர்கள் அடையும் பலனும் குந்தகம் செய்வோர் அடையும் பாவமும் கூறப்பட்டுள்ளன.
நாயக்க மன்னர்கள் பேரில் புண்ணிய தர்மக்கட்டளை : நாயக்க மன்னர்கள் தங்களுக்கு புண்ணியம் முசிறியில் அமைந்துள்ள சோழீசுரமுடையார் - கற்பூரவல்லியம்மன் கோயில் விழாப் பூசைக்கு தர்மக் கட்டளை உண்டு பண்ணுமாறு வீரமலைப்பாளையம் கம்பய நாயக்கருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டதும் அதற்கு அவரும் கூடலூர் பதி காவல் பணத்தில் இருந்து கோயில் விழாப் பூசைக்கு நாளொன்றுக்கு 2 பணம் வீதம் மாதமொன்றுக்கு 6 பொன்னும் வருடம் ஒன்றுக்கு 72 பொன்னும் வழங்க வழக்கம் பண்ணிக் கொடுத்த செய்தி இந்த செப்புப்பட்டையத்தில் கூறப்பட்டுள்ளது.
மகாசனங்கள் நாயக்கமன்னர்கள் பேரில் ஏற்படுத்திய தர்மக் கட்டளை மானியம்: மதுரை நாயக்க மன்னர்களுக்கும் புண்ணியம் விளங்கிட முசிறியில் அமைந்துள்ள சோழீசுரமுடையார் - கற்பூரவல்லியம்மன் திருக்கோயிலுக்கு புண்ணிய கட்டளை ஏற்படுத்திட கோபாலகிருஷ்ண சமுத்திரம் ஊர் மகா சனங்களுக்கு கட்டளையிட்டது பற்றி பேசுகிறது 2வது செப்புப்பட்டையம்.
செட்டியார்கள் நாயக்க மன்னர்கள் பேரில் அர்த்த சாம பல்லக்குச் சேர்வை கட்டளை நிறுவுதல்: முதல் மற்றும் இரண்டாவது செப்புப்பட்டயத்தில் தானம் வழங்க கட்டளையிட்டவர்கள் நாயக்க மன்னர்களுக்கு புண்ணியம் கிடைத்திட வேண்டி சோழீசுரமுடையார் -கற்பூரவல்லியம்மன் அர்த்த சாம பல்லக்கு சேர்வை கட்டளை நிறுவ ஆதனூர் பத்து வில் குழித்தண்டலை ஊரினைச் சேர்ந்த செட்டியார்களுக்குக் கட்டளையிடும் செய்தியை முசிறி கோயிலில் கிடைத்த 3ஆவது செப்புப்பட்டயம் எடுத்துரைக்கிறது.
அயிலுசீமை கால சந்திக்கட்டளை தர்மம் நிறுவுதல்: முசிறி கோயிலில் உள்ள 4 -வது செப்புப்பட்டயதில், முசிறி சோழீசுரமுடையாருக்கு அயிலுசீமை கால சந்திக்கட்டளைத் தர்மத்துக்கு மாதம் ஒன்றுக்கு 3 பொன் ஆக வழங்க கட்டளையிட்டது பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. செப்புப்பட்டையத்தின் இறுதியில் ஸ்ரீ துப்பாக்குலு ராமகிருஷ்டினப்ப நாயக்கர், தாண்டவராய முதலியார் ஆகிய இருவரும் புண்ணியம் பெற முசிறி சோழீசுரமுடையார் - கற்பூரவல்லியம்மன் கால சந்தி கட்டளை உண்டு பண்ணின தர்மத்துக்கு நாளொன்றுக்கு ஒரு பணம் வீதம் வருடம் ஒன்றுக்கு 36 பொன் வழங்கியதாகவும் செய்திகள் உள்ளன.
இதையும் படிங்க: மதுரையில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு! கழிவு நீர் தொட்டி அமைக்க குழி தோண்டிய போது கிடைத்த பொக்கிஷம்!